பாரில் இரு தரப்பினரிடையே தகராறு

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பாரில் இரவில் குடித்து விட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்த போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியில் அனுப்பினர். வெளியில் வந்த இரு தரப்பினரும் ஹோட்டல் அருகே உள்ள மற்றொரு கடையில் வாசலில் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஒரு தரப்பினர் மூன்று இருசக்கர வாகனத்திலும் மற்றொரு தரப்பினர் சொகுசு காரிலும் இரு தரப்பினரும் அப்பகுதியை விட்டு புறப்பட்டனர். அப்பொழுது ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கற்களை காரின் மீது வீச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சொகுசு காரில் வந்த நபர்கள் காரை வேகமாக இயக்கி சென்று அவர்களை இடிக்க முயன்ற போது மற்றொரு வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் 18 வயதுடைய யான்சி என்கிற பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தோழியின் நண்பர் வீட்டில் தங்கியிருந்த பெண்

மேலும் அவருடன் வந்த 17 வயதுடைய அவருடைய தோழிக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு காரில் வந்து இடித்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் யான்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மீட்பு முகாமில் வசித்து வருவதும் கடந்த (மே 19 ) அன்று தனது பள்ளி தோழியான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பிதாவை சந்திக்க வந்த நிலையில் அவர் இல்லாததால் தம்பிதாவின் பக்கத்து ஊரை சேர்ந்த அவரது சிறு வயது தோழி பவுசியா தீபிகா என்பவரது வீட்டில் கடந்த 10 நாட்களாக யான்சி தங்கி இருந்தது தெரிய வந்தது.

கடந்த 28 - ம் தேதி மாலை படத்துக்கு செல்வதாக கூறி வெளியே சென்று மறுநாள் 29ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்ததால் பவுசியாவின் தாய் திட்டியதாகவும் அதனால் வீட்டை விட்டு இவர்கள் வெளியேறிய போது இந்த விபத்து நடைபெற்றதாக.விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சொகுசு காரில் இடித்து சென்ற நபர் சுமன் என்று தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.