செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 68 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த பாதை அமைய உள்ளது பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தைப் பொறுத்தவரை செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக காஞ்சிபுரம், அரக்கோணம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கு தினசரி 10 மின்சார ரயில்கள் மற்றும் வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 69 கிலோமீட்டருக்கு செங்கல்பட்டு - அரக்கோணம் பாதை ஒருவழிப்பாதையாக உள்ளது.

இந்த வழித்தடத்தில் தினமும் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவழித்தடம் என்பதால் மிகப்பெரிய சிரமமும் ஏற்படுகிறது. இதனால் 2வது ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அரக்கோணம் வழித்தடத்தில் ரெட்டிப்பாளையம், பாலூர், பழைய சீவரம், நத்தப்பேட்டை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம் என ரயில் நிலையங்கள் உள்ளது.

கூடுதல் ரயில் பாதை இல்லாதது தேவைப்படும் நேரத்தில் போதிய ரயில்களை இயக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 68 கிலோமீட்டர் தூரத்துக்கு இரட்டைப் பாதை அமைக்க கடந்த ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து ரூ.993 கோடி செலவில் இந்த பாதை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரக்கோணம் - செங்கல்பட்டு 2வது ரயில் பாதை சென்னை புறநகர் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதிலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவித்தார். இந்த வழித்தடத்தில் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தி சிமெண்ட், வாகனங்கள், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் போக்குவரத்திற்குப் பயனளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களை இணைக்கும் புறநகர் ரயில்களை இயக்குவதற்கு ஒரு வலையமைப்பை உருவாக்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த வழித்தடம் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட முக்கிய பொருளாதார மற்றும் தொழில்துறை இடங்களுக்கும், அங்கு செயல்படும் முக்கியமான ஆட்டோமொபைல், சிமெண்ட் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் சேவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரை செய்யப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலைய திட்டமும் இருப்பதால் இந்த பாதை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.