தஞ்சாவூர்: சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் இருக்கிறது என்பது தெரியுங்களா? அதுவும் பெருமைகள் பல உள்ளடக்கிய தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பதும் தெரியுங்களா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்றும் பொருள்படும். அதற்காக நெற்களஞ்சியம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் இருக்கு... சொல்ல... சொல்ல நிறைய இருக்கு. கட்டிடம், கலை, கதை, கவி என்று தஞ்சையின் மண், கல் கவிப்பாடும். நெல் வயலை தொட்டு வரும் காற்றும் இசைப்பாடும். நிறைந்து ோயில்களின் வரலாறுகள் பிரமிக்க வைக்கும்.

எத்தனை பெருமை, சுற்றிப்பார்க்க எத்தனை இடம் என்று மனம் ரம்யமாகும். மண்ணுக்கே வாசனை கொடுக்கும் ஊர். மணம் மண்ணுக்கு மட்டுமில்லை இங்கு வரும் அனைவருக்கும்தான். சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்த பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, மணிமண்டபத்திற்கு அடுத்தப்படியாக ஏராளமான தெரிந்து கொள்ள வேண்டிய கோயில்களும் உள்ளன. அவற்றின் வரலாறுகள் பிரமிக்க வைக்கும்.

அந்த வகையில் பிரம்மனுக்கு கர்வம் உண்டாக, அதனால் ஏற்பட்ட விளைவுகளால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அதனை நீக்கிய தலம்தான் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் உள்ள ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனான திருமால் ஹரசாப விமோசன பெருமாள் எனவும் மூலவர் கமலநாதன் என்ற பெயரிலும், தாயார் கமலவல்லி நாச்சியார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

புராண காலத்தில் இந்த ஊர் கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஏழாவதாக இக்கோயில் உள்ளது.

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்கள் இருந்தன. இதே போன்று படைப்பு கடவுளான பிரம்ம தேவனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் கர்வம் அடைந்த பிரம்ம தேவன் சிவனை விட தான் உயர்ந்தவன் என கருதி சிவபெருமானை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார். இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்ம தேவனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். இதனால் சிவபெருமானுக்கு மனிதர்களை கொன்றால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் வெட்டப்பட்ட கபாலம் சிவனின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டது.

இதை போக்க புறப்பட்ட போது விஷ்ணு கோயில் கொண்ட இத்தலத்திற்கு வந்தபோது சிவனின் கையிலிருந்த கபாலம் நீங்கியது. ஹரன் எனப்படும் சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது இதனால் இத்தல பெருமாள் ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவத்தி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஊரில் கண்டீஸ்வரர் என்கிற பெயரில் சிவபெருமானும் கோயில் கொண்டுள்ளார். இந்த தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு தனி கோயில் இல்லை என்பதால் அவர் கண்டீஸ்வரர் சிவப்பெருமான் கோயிலில் சரஸ்வதி சமேதமாக அருள்பாலிக்கிறார்.

திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், கோயிலடி ஆகிய ஊர்களில் இருக்கும் பெருமாளுடன் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால் பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய தோஷங்களும் இங்கு வழிபட அவை நீங்கி நன்மையுண்டாகும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.