தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மணி என்பவர் சுற்றுலா வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரு சக்கர வாகனத்தை அவரது அலுவலகத்தில் முன்பாக சாலையில் நிறுத்திவிட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் மணியின் இருசக்கர வாகனத்தை இரண்டு சிறுவர்கள் காலை ஆறு மணியளவில் தென்கரை வள்ளுவர் சிலை சாலையில் தள்ளி உருட்டி சென்றுள்ளனர். அப்பொழுது அவரின் நண்பரான மற்றொரு வாகன ஓட்டுநர் இரண்டு சிறுவர்கள் மணியின் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வது குறித்து மணிக்கு அலைபேசியில் அழைத்து கேட்டுள்ளார். அப்பொழுது மணியின் இருசக்கர வாகனம் அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி விட்டு வந்ததாகவும், தனது இருசக்கர வாகனத்தை யாரையும் எடுத்துச் செல்ல தான் கூறவில்லை என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணியின் சக நண்பர்களான வாகன ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற சிறுவர்களை பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதியில் தேடியுள்ளனர். அப்பொழுது தென்கரைப் பகுதி பெரியகுளம் - தேனி சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வாகனத்தில் எரிபொருள் இல்லாத நிலையில் வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்ட போது அந்த சிறுவர்கள் மேலும் அவரது நண்பர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து அந்த வாகனத்தின் மூலம் தள்ளி சென்ற வாகனத்தையும் கொண்டு செல்ல திட்டமிட்ட போது வாகனத்தை தேடிச் சென்ற ஓட்டுநர்கள் சிறுவர்கள் மூவரை பிடித்த போது உதவி செய்ய வந்த சிறுவன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தை உருட்டி தள்ளிச் சென்ற இரண்டு சிறார்களை பிடித்த வாகன ஓட்டுநர்கள் விசாரணை செய்ததில் இரண்டு சிறார்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் பிடிபட்ட இரண்டு சிறார்களையும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு உத்தரவின் பேரில் சிறார்களிடம் குற்றச் சம்பவங்களை கண்டறியும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிது. 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் ஆசைகளைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தேனி அருகே உள்ள டோம்புச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (24 வயது) இளைஞர் செல்போன் மோகம், ஆடம்பர செலவு செய்வதற்கு பணம், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதில் ஆசை உள்ள சிறார்களை பயன்படுத்தி பெரியகுளம் பகுதியில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் ஏற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 13 இருசக்கர வாகனங்களை ஒரே நாளில் மீட்டுள்ளனர். சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடி சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்ரம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உட்பட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட மூன்று சிறார்களையும் காவல்துறையினர் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்திய பொழுது சிறார்கள் மூவரையும் சிறார் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுவித்துள்ளார். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுபோன்ற சிறார்களை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டத்தில் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.