மதுரை மேலூரில் வீட்டின் அருகே விளையாடசென்ற 7 வயது சிறுவன் பாழடைந்த வீட்டிற்குள் சடலமாக மீட்பு - கொலையா? சிறுவனின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் விசாரணை தீவிரம்.

தனியாமங்கலம் கிராமத்தில் வசித்த சிறுவன்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன்(52)-சத்யா(43) தம்பதி திருமணமாகி 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்துவரும் நிலையில் இளையமகள் மற்றும் மகன் முத்துவேலன் (7) தாயார் சத்யா வசித்துவந்துள்ளனர். இதனிடையே பெரியகருப்பன் வேலைக்காக துபாயில் சென்றுள்ளார். இதன் காரணமாக தனியாமங்கலம் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் சத்யா 2 பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளார்.

தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்துவரும் சிறுவன்

இந்நிலையில் வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்துவரும் சிறுவன் முத்துவேலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டின் அருகே காலையில் விளையாட சென்றுள்ளான். இதையடுத்து மதியம் வீட்டிற்கு உணவு சாப்பிட வராத நிலையில் தாயார் சத்யா மற்றும் உறவினர்கள் சிறுவனை தேடியுள்ளனர். மதியம் தொடங்கி மாலை வரை கிராமம் முழுவதும் தேடியும் முத்துவேலனை காணாத நிலையில் கீழவளவு காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து கிராமத்திற்கு வந்த காவல்துறையினர் கிராமத்தினர் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடினர். இரவிலும் தேடியும் கிடைக்காத நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் தனியாமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து தனிப்படை காவலர்களை நியமித்துள்ளார்.

ட்ரோன் மூலமாகவும் கிராமத்தை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் தேட தொடங்கியுள்ளனர்

அதன்படி இன்று காலை முதல் ஏராளமான காவல்துறையினர் ட்ரோன் மூலமாகவும் கிராமத்தை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் தேட தொடங்கியுள்ளனர். அப்போது சிறுவனின் வீட்டின் அருகே 400 மீட்டர் தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீடு ஒன்றில் சிறுவன் முத்துவேலன் குப்புற படுத்தபடி மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். சிறுவன் பாழடைந்த வீட்டிற்குள் சென்றது எப்படி உயிரிழந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே சிறுவன் முத்துவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என கூறியுள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது வீட்டில் அருகே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கிராமத்தில் உள்ள பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்

இது குறித்து பேசிய சிறுவனின் உறவினர்கள் :

சிறுவனை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வரை உடலை பெறமாட்டோம் எனவும், சிறுவனின் சடலத்தில் கழுத்தில் கயிறு தழும்பு இருப்பதாகவும், வாயில் ரத்தம், கண்ணிற்கு கீழ் கருமை நிறத்தில் காயம் இருப்பதால் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். காவல்துறையினர் புகாரளித்த உடனே இன்றுபோல் தீவிரமாக தேடியிருந்தால் சிறுவனை மீட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும் எனவும், காவல்துறையினர் எங்களை தேட சொன்னதாகவும் தெரிவித்தனர். உயிரழந்த சிறுவனின் தாயாருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்