கோயம்பேடு அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 65 வயது முதியவருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த கருமலைசாமி என்ற 65 வயது முதியவர், பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து, கோயம்பேடு மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கருமலைசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கருமலைசாமி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என, தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

எஸ்.பி.ஐ வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்து 1.47 ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பலில் ஒருவர் கைது

திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் அன்பழகன் ( வயது 42 ) மரக்கடை வியாபாரி. இவர், கடந்த 2023 ல் கொளத்துாரில் உள்ள நிர்மல் வர்ஷா தம்பதியின் அக்குபஞ்சர் கிளினிக்கில் சிகிச்சைக்காக வரும் போது, அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாயிலாக சந்துரு, குணசேகரன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர்.

ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அன்பழகன், எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் 2023 ஜூலை 7ம் தேதியிட்டு, 1.47 கோடி ரூபாய்க்கு போலி வரைவோலை தயார் செய்துள்ளார்.

அதை சந்துருவிடம் கொடுத்து, அவரது பெயரில் செங்குன்றத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் செலுத்தி உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள வங்கி கிளையில் அந்த வரைவோலையை சோதனை செய்த போது அது போலி என தெரிந்தது. இதுகுறித்து செங்குன்றம் ஹெச்.டி.எப்.சி., வங்கி கிளை மேலாளர் டெரிக் லெஸ்லி ஸ்டீவன்ஸ் கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

விசாரித்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த திருச்சியைச் சேர்ந்த அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சந்துரு , குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், நிர்மல் - வர்ஷா தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.