சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு எப்படி திரும்பப் பெறப்பட்டது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

சென்னை அண்ணாநகரில், கடந்த 2024 ல், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இழப்பீடு கோரியும், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தைப் பின்பற்றாமல் தவறிழைத்த அதிகாரிகள் மீது, துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் ;

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த, கடந்த 4 ம் தேதி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கூறியதாவது ;

கடந்த 2024 அக்டோபரில் வழக்கை விசாரணைக்கு எடுத்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தர விட்டது. ஆனால், கடந்த 4 ம் தேதி தான், விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவை, குறுகிய காலத்தில் அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நிறைவேற்ற ஓராண்டுக்கு மேல் அரசு எடுத்து கொண்டது ஏன் , எப்படி, சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இது, அரசுக்கு அழகல்ல. காவல்துறை, நீதித் துறை நிர்வாகத்தை சீர்குலைக்கிறது. இவ்வாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்தனர்.