தஞ்சாவூர்: அரசியல் அரங்கை மட்டுமல்ல... தன் கட்சி அமைச்சர்களையும் அதிர விடுவது மாதிரி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது என்ன தெரியுங்களா?

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினாராம். அப்போது, கட்சி நிர்வாகிகள், வருங்கால மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான நடத்தை விதிகள் குறித்து அவர் மிகவும் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்று 18 நாட்கள் ஆகிறது. இந்த 2 வாரத்தில் ஆட்சி, அதிகாரம் மட்டுமல்லாது கட்சியிலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், திராவிட கட்சிகள் பாணியில் தவெகவினர் மாமூல் கேட்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தன. இது தொடர்பாக ஆதாரத்துடன் தவெசு தலைமை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் தப்ப முடியாது என்பதை முதல்வர் ஜோசப் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் சொத்து விவர பட்டியலை விரைவில் சமர்ப்பிக்கும்படி முதல்வர் ஜோசப் விஜய் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் தரும் சொத்து பட்டியலை அப்டேட் செய்து தனி பைலாக தன்னிடம் கொடுக்க கூறியுள்ளார். இதில், தனது சொத்து விவரம் குறித்த தகவல்களையும் சேர்க்க முதல்வர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார்.

அமைச்சர்கள், எம் எல்ஏக்களின் சம்பளம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்ட சொத்து விவரங்களுடன் அவை சரி பார்க்கப்படும். இதில் வேறுபாடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய விளக்கம் தர நேரிடும். இந்த விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டேன். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று வழக்கு தொடர்ந்தால் அரசு மற்றும் கட்சி பதவிகள் பறிக்கப்படும். எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்காமல் வஞ்சம், ஊழல் முறைகேட்டிலும் ஈடுபடாமல் மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நம் கட்சி துாய சக்தி மக்கள் பணத்தில் இருந்து ஒரு காசு கூட எடுக்கமாட்டேன். ஊழல் செய்யமாட்டேன். என்னுடன் ஊழல் இருப்பவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தேன். அதை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். இதை மனதில் வைத்துத்தான் மக்கள் சேவையில் ஈடுபடுகிறேன். அதுபோல நீங்களும் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று விபரமறிந்த தவெகவினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பதவி நீக்கம்: மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் சிக்கி, முறைகேடுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

தூய்மையான அரசியல்: "மக்களுக்காகப் பணியாற்றவே நாம் அரசியலுக்கு வந்துள்ளோம். சுயநலத்திற்கோ அல்லது முறையற்ற வகையில் சொத்து சேர்ப்பதற்கோ இங்கு இடமில்லை" என அவர் நிர்வாகிகளிடம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கக் கட்டுப்பாடு: மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல், தொடக்கத்திலேயே தனது கட்சி நிர்வாகிகளுக்கு இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகளை விஜய் விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "அதிகாரத்திற்கு வரும் முன்பே தவறு செய்பவர்களுக்குக் கதவு அடைக்கப்படும்" என்ற அவரது முடிவு, தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

"ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதே நமது இலக்கு" என்பதைச் செயலில் காட்டத் துடிக்கும் முதல்வர் ஜோசப் விஜய், இதற்காகத் தனி ஒழுங்கு நடவடிக்கை குழுவையும் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் பிம்பத்தை மக்கள் மத்தியில் நேர்மையான ஒன்றாக நிலைநிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.