திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால், விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கண்ணீர் நடுவிலும் கருணை

பாஸ்கரன் 10ஆம் வகுப்பு வரை படித்து, அப்பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது தாயார் விசாலாட்சியின் 16ஆம் நாள் காரியம் நடைபெற இருந்ததால், அதற்கான பொருட்கள் வாங்க பாஸ்கரன் தனது மனைவி பிரியங்கா, 11 மாத குழந்தை மற்றும் சகோதரியுடன் காரில் உடுமலைப்பேட்டைக்கு சென்றார்.

பொருட்கள் வாங்கி வீடு திரும்பும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் பாஸ்கரன் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மனிதநேய உணர்வுடன் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாஸ்கரனின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த தானத்தின் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைக்க உள்ளது.