கர்நாடகாவில் நீர்ப்பாசனத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.எல்.ஏ., மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடக் மாவட்டம் சின்சலியை சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய் புஜார் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பாஜக எம்எல்ஏ சந்திரு லமானி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களான மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குருநாயக் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏ சந்திரு லமானி ஷிராஹட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்.

அவரது தொகுதியில் சிறு நீர்ப்பாசனத் துறையின் கீழ் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள சாலையின் இருபக்கமும் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சந்திரு லமானி ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்திரு லமானி மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் பாஜக எம்.எல்.ஏ., சந்திரு லமானி மற்றும் உதவியாளர்கள் இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் - துணை முதல்வர் கடும் விமர்சனம்

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “லோக்ஆயுக்தா சட்டத்தின் மூலம் சந்திரு லமானி மாட்டிக் கொண்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?. மற்றவர்கள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளை சுமத்துவது எளிது. ஆனால் இப்போது ஒரு பாஜக எம்எல்ஏவே பிடிபட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என காட்டமாக பதிலளித்துள்ளார். லோக்ஆயுக்தா ஆணையம் நடத்தும் விசாரணையை நாங்கள் எந்த வகையிலும் தடுக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்த சம்பவம் பற்றி பதிலளித்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “பாஜக தலைவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள் இந்த நாட்டில் ஊழல் இல்லாதவர்கள். லோக்ஆயுக்தாவுக்கு சில தவறான தகவல்கள் கிடைத்திருக்கலாம்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

ஆனால் பாஜக எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மைகள் பற்றி தகவல்களை உறுதி செய்த பிறகு பதிலளிப்பதாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார். அதேசமயம் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அசோக் கவுடா கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் பெரிய அளவிலான ஊழல் நடப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் எம்.எல்.ஏ., சந்திரு லமானியின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.