விழுப்புரம்: ராமகுண்டம் RFCL நிறுவனத்திலிருந்து 2,638 மெட்ரிக் டன் யூரியா உரமூட்டைகள் சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன. இதனை விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் (த&தக) எம்.என். விஜயகுமார் மற்றும் RFCL மண்டல மேலாளர் ரகுபதிராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

2,638 மெட்ரிக் டன் யூரியா உரமூட்டைகள் சரக்கு ரயில் மூலம் வருகை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் ராமகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து RFCL நிறுவன யூரியா 2638 மெ.டன் உர மூட்டைகளை விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர்(த&தக) திரு.எம்.என்.விஜயகுமார் மற்றும் RFCL உர நிறுவன மண்டல மேலாளர் ரகுபதிராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 6769 மெ.டன், டி.ஏ.பி. 2405 மெ.டன், பொட்டாஷ் 1309 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 8180 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1932 மெ.டன் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் RFCL நிறுவனத்திலிருந்து 2638 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன.

மற்ற மாவட்டங்களுக்கு யூரியா அனுப்பி வைப்பு

இதில் RFCL நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 2638 மெ.டன் யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 100.80 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 617.4 மெ.டன், அரியலூர் மாவட்டத்திற்கு 302.4 மெ.டன். , காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 80.40 மெ.டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 126.00 மெ.டன், கடலூர் மாவட்டத்திற்கு 504.00 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 680.00 மெ.டன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 151.20 மெ.டன் யூரியா உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரங்கள் அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது.

உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும்

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.