திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான, குளுமையான கால நிலையை அனுபவிக்கவும், மலைப்பகுதிகளில் உள்ள குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களின் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், மே மாதம் 31 ஆம் தேதி வரை இ பாஸ் பதிவு செய்து 1,19,502 வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது.

அப்படி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, வார நாட்களில் ஊட்டியில் 6000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 01.04.2025 முதல் 30.06.2025 வரை வாரநாட்களில் 4000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கும் கொடைக்கானலுக்கு அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த, கோடைக்காலத்தில் 953 சுற்றுலா பேருந்துகள்,51,632 கார்கள்,1,543 மினி பஸ்கள், 3,913 இரு சக்கர வாகனங்கள், 5,622 வேன்கள், 506 இதர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதே போல 1,83,671 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட நிலையில்,1,19502 வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு வந்தன. இ-பாஸ் பதிவு செய்த 64,169 வாகனங்கள் வரவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.