தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினரின் தொடர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடியின் போது சாக்குகள் பற்றாக்குறை, மழையால் நெல்மணிகள் நனைந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டது போல் இப்போதும் ஆகிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்து நெல்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 3.50 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை சுமார் 1.70 லட்சம் ஏக்கரில் அறுவடைப்பணிகள் முடிந்துள்ளது.

வயல்கள் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பெல்ட் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே அறுவடைப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த பரப்பளவில் மட்டுமே அறுவடை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது வயல்களில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால் டயர் பொறுத்தப்பட்ட பெரிய இயந்திரங்களும் தற்போது நெல் அறுவடைப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தஞ்சை, ஆலக்குடி, வல்லம், சிவகாமிபுரம், 8நம்பர் கரம்பை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து விவசாயிகள் நெல்களை அரசு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் பெற்று கொள்முதல் நிலைய கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் நெல்களை விற்பனை செய்ய முடியும். இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறையினரின் காலவரையற்ற போராட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளதால், சம்பா பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விற்க கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற முடியாததால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. குறுவையில் ஏற்பட்ட நெருக்கடி போல் சம்பாவிலும ஏற்பட வாய்ப்புள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்களை கொட்டி வைத்து தொடர்ந்து காத்து வருகின்றனர். மேலும் உடனடியாக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தஞ்சையை அடுத்த ஆலக்குடி உட்பட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோழகிரிப்பட்டி விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது. இந்த நேரத்தில் வருவாய்துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தால் அடங்கல் பெற்று நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை அறுவடையின் போது சாக்கு பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இப்போது சம்பா அறுவடை மும்முரம் அடைந்துள்ள நிலையில் தொடர் போராட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. போராட்டம் முடிவுக்கு வரும் வரை அடங்கல் இன்றி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.