சமையல் செய்ய மறுத்ததால் உயிரை விட்டே துயரமான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்துள்ளது. முட்டைக் குழம்பு சமைத்துத் தர மனைவி மறுத்ததால், கணவர் திகுராம் சென் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட லம்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் திகுராம் சென். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு முட்டை குழம்பு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திகுராம் சென் மனைவி, தீஜ் விழாவுக்கான விரதத்தில் இருந்துள்ளார். கணவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் கடைபிடிக்கும் விரதம் தீஜ் விரதம் ஆகும். விரதம் இருந்ததால் முட்டைக் குழம்பு சமைக்க மனைவி மறுத்துள்ளார். இது திகுராம் சென்னுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

துயர முடிவு

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி முட்டை குழம்பு சமைக்க மறுத்ததால் திகுராம் சென் மனமுடைந்துள்ளார். மறுநாள் காலை, அதாவது திங்கள்கிழமை அதிகாலை திகுராம் சென் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் குறித்து கோட்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் வாக்குமூலமும், சம்பவ இடத்தில் நடந்த விசாரணையும் இந்த துயரமான நிகழ்வுக்கு என்ன காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவன் - மனைவி இடையேயான ஒரு சிறிய சண்டை, தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு இட்டுச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.