கேரளா என்றாலே தமிழ்நாட்டிலும் பலருக்கு நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். பிற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும்போது, தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. 41 நாட்கள் அதாவது 1 மண்டலம் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலைக்கு இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் குழுவாக இணைந்து, பேருந்து அல்லது வேன் மூலம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோன்று சமீப காலமாக தனியாக பேருந்து மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ சபரிமலை செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்து துறையும் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்த நிலையில், சபரிமலையில் மகரஜோதி நாளில் பம்பையில் இருந்து 900 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறியுள்ளார். மகரஜோதி முன்னேற்பாடுகள் தொடர்பாக பம்பையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நடப்பு சீசனில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பான சேவைகளை வழங்கியது எனவும், நடப்பு சீசனில் ஒரு விபத்து கூட நடைபெறவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.

விபத்துகளே இல்லாமல் இருக்க அடுத்த சீசனில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும். மகரஜோதி நாளில் பம்பையிலிருந்து 900 அரசு பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 100 பேருந்துகள் தயார் நிலையில் பக்கத்து மாவட்ட டிப்போக்களில் நிறுத்தப்பட்டிருக்கும். பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு அங்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப பம்பை அரசு பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்துகள், வரவழைக்கப்படும். பொதுவாக இந்த சீசனில் புகார்கள் குறைவு என்பது நிம்மதியை தந்துள்ளது. தேவசம் போர்டும் , அரசும் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததால் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.