சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாநில அரசு தற்போதைக்கு தலையிடவோ அல்லது சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கவோ முடியாது என்று மாநில தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் தெரிவித்தாா். கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். முறையாக விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே சபரிமலை கோயிலில் கடந்த 2019ல் அரங்கேறிய தங்கத் திருட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அப்போது நடந்த புனரமைப்புப் பணிகளின்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.

அப்போது தான் தங்கம் திருட்டு போனது. துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் எனச் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இடையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவே விசாரணையைக் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாக்கும் வகையில், எஸ்ஐடி விசாரணையில் முதல்வா் அலுவலகம் குறுக்கிட்டதாக முன்பு காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலைப்பாடு குறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் கூறியதாவது, கேரள உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி விசாரித்து வருவதால், தற்போதைய நிலையில் மாநில அரசு தலையிடவோ அல்லது வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவோ முடியாது.

எஸ்ஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், விசாரணை விவரங்கள் கிடைக்கப் பெறும். அதன் மூலம் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். அப்போது, சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க முடியும். சுவாமி ஐயப்பனின் தங்கத்தைத் திருடிய எவரையும் காங்கிரஸ் அரசு பாதுகாக்காது. அவா்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவா். இதுவே, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மாநில அரசின் நிலைப்பாடு என்றாா்.