சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகள், அருகேயுள்ள இரு தூண்கள் மற்றும் கருவறைக் கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய செப்புக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கேரள உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தங்கக் கவச புதுப்பிப்பு பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவசம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், புதுப்பிப்பு பணியை மேற்கொண்ட சென்னை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபா் கோவா்தன் ரோட்டம் உள்பட 10 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றி, பங்கஜ் பண்டாரி, கோவா்தன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கொல்லம் ஊழல் கண்காணிப்பு நீதிமன்றத்தில் எஸ்ஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, துவாரபாலகா்கள், இரு தூண்கள், கருவறைக்கதவுகளின் தங்க முலாம் பூசப்பட்ட செப்புக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிப்புப் பணிக்காக அகற்றப்பட்டபோது மொத்தம் சுமாா் 42 கிலோ எடை இருந்தன. இந்தக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான கட்டணமாக சுமாா் 109 கிராம் தங்கத்தை தாம் எடுத்ததாக ஒப்புக் கொண்ட பங்கஜ் பண்டாரி, அதற்கு நிகரான தங்கத்தை ஒப்படைத்தாா்.

இதேபோல், தங்கக் கவசங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுமாா் 475 கிராம் தங்கத்தை உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் இருந்து பெற்றதாக கூறிய கோவா்தன், அதற்கு நிகரான தங்கத்தை எஸ்ஐடி முன் ஒப்படைத்தாா். மீட்கப்பட்ட இந்த தங்கத்தைவிட அதிக தங்கம் மாயமாகி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தங்கக் கவசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அறிவியல்பூா்வ பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற வேண்டியுள்ளது என்று எஸ்ஐடி மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் , வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சி.பி.ஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது . இது குறித்து முன்னாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது வழக்கு விசாரணையை கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன் , ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அவகாசம் . மேலும் , வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ( எஸ்ஐடி ) மேலும் ஆறு வாரங்கள் நீதிபதிகள் அவகாசம் வழங்கினர் . ஏற்கனவே வரும் ஜனவரி 19ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .