கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயிலின் முன்பு உள்ள 18 படிகளில் பாதம் தொட்டு கோயிலுக்குள் செல்வது வழக்கம். கோயிலின் உள்ள மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னதி முன் இருக்கும் இரண்டு துவார பாலகர் சிலைகளில் அண்மையில் தங்கம் போல் விளங்கும் முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. கடந்த 2019 ஆம் ஆண்டில்,துவார பாலகர் சிலையில் உள்ள தங்க தகடுகளை பழுது நீக்குவதற்காகவும் மீண்டும் தங்க முலாம் பூசுவதற்காக கோயில் நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட ஆணையரிடமிருந்து அனுமதி பெறாமல், சில பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது எடை 42 கிலோ தங்க முலாம் பூசிய தகடுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் திரும்பி கொடுத்த போது , அவற்றின் எடை 4.52 கிலோ குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு கேரள நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேவஸ்வத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி சபரிமலையின் சொத்துக்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் . அப்போது ஆவணங்களை சரிபார்த்த நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தங்க முலாம் பூசிய தகடுகள் சபரிமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டபோது எடை ஏன் சரிபார்க்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.

மேலும் சபரிமலையில் உள்ள கோவிலின் விலை மதிப்பில்லாத பொருட்களை வெளியில் அனுப்பும் போது கோவில் நிர்வாகிகள் தேவசம் போர்டு உறுப்பினர்கள் சிறப்பு ஆணையரிடம் அனுமதி கேட்டு இருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்யவில்லை. அதற்கு என்ன காரணம் எனவும் இது நடைமுறையில் இருக்கும் உத்தரவு தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் தங்க முலாம் பூசிய தகடுகள் எடை குறைந்ததன் காரணமாக விரிவான விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் விஜிலென்ஸ் பிரிவு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தேவசம் போர்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.