கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இக்கோவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வந்து செல்கின்றனர். வருடந்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் ஐயப்ப தேஸ்சம்போர்டு கடைபிடித்து வருகிறது. சபரிமலை மண்டல பூஜை என்பது ஒரு முக்கியமான ஒரு நிகழ்வாகும், குறிப்பாக தென்னிந்தியாவில் பக்தி, ஒழுக்கம் மற்றும் ஆன்மீக இலக்குகளை அடைதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், தனுமாசத்தின் போது மண்டல பூஜை 11 அல்லது 12 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சபரிமலை கோவிலின் வளர்ச்சிக்கு கேரள அரசும், தேவசம்போர்டும் பல்வேறு திட்ட பணிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் சபரிமலை ரோப்வே திட்டத்திற்கு மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருள்களை எடுத்துச் செல்ல தற்போது டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இப்பணியில் டிராக்டர்கள் அகற்றப்பட்டு ரோப்கார்கள் பயன்படுத்தப்படும். இந்த ரோப்வே பம்பாவிலிருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை கொண்டு செல்வதற்கும் நெரிசலை குறைக்கவும் உதவும்.

2.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரோப்வே அமைக்க 180 முதல் 250 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 40,000 முதல் 60,000 டன் பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்த ரோப்வே திட்டம் வடிவமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு கேரள மாநிலத்தின் வனவிலங்கு வாரியம் நேற்று ஒப்புதல் அளித்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டம் இனி மத்திய அரசிடம் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.