இரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், கோவையில் ரயில்கள் மீது நடைபெறும் கல்வீச்சு சம்பவங்களைத் தடுக்க தண்டவாளப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மூன்று கல்வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய ஏழு சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருகூர் – போத்தனூர், கோவை – வடகோவை மற்றும் சிங்காநல்லூர் இடையேயான ரயில் பாதைகளில் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டில், கோவை – இருகூர் இடையிலான ஒண்டிப்புதூர் பகுதியில் ஒரு சம்பவமும், கோவை – வடகோவை இடையே ப்ரூக்ஃபீல்டு பின்புறப் பகுதியில் இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதில் சில சிறுவர்கள், வந்தே பாரத் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவங்களில் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய ஏழு சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், “ரயில்கள் மீது கல் வீசுவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். எனவே பாதை ஓரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்” என எச்சரித்தனர்.

மேலும், ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.