<p data-pm-slice="0 0 []">தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் சார்பில் கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபானங்களின் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>
<p>கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பு மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகவும், அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இதனைத் தொடர்ந்து முதல் நாளில் 4 கடைகளும், இரண்டாம் நாளில் 10 கடைகளும் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமுள்ள 55 கடைகளும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டம் நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. வடக்கு பிரிவில் 156 கடைகளும், தெற்கு பிரிவில் 128 கடைகளும் இருந்தன. தற்போது வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி மாவட்டத்தில் 215 கடைகள் மட்டுமே செயல்படும்” என்றனர்.</p>
<p>மேலும், மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து இயங்கி வந்த 50 பார்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒவ்வொரு கடையிலும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மதுபான இருப்புகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர், இருப்பில் உள்ள மதுபானங்கள் அனைத்தும் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>