கோயம்புத்தூர் மாநகரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் சிறுவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை மாநகரில் சமீபகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக
Singanallur மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டு நடந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் 4 கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, அவரது உறவினர் இசக்கி, திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த தீபக், கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த மனோஜ், திருச்சி பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தங்கி இருந்து சிங்காநல்லூர், போத்தனூர், ஆலந்துறை, அன்னூர், புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி, செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.