கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுப்புத்தூர் கிராமத்தில் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு குழம்பு வைப்பதற்காக கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்ற போது குண்டு பாய்ந்து பக்கத்து வீட்டுக்காரர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுப்புத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது மேல்மதூர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவ்வப்போது வனப் பகுதியில் அதனை வைத்து விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை வீட்டுக்கு அவரது மருமகன் வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க முடிவு செய்தார் அண்ணாமலை. இதனையடுத்து வீட்டின் வெளியே சுற்றித்திரிந்த கோழி ஒன்றை பிடிக்க அவர் நினைத்தார். ஆனால், அந்த கோழி அவரது கையில் சிக்காததால், அதனை தான் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து சுட்டுப் பிடிக்க முடிவு செய்தார்.

வீட்டின் உள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்த அண்ணாமலை, அந்த கோழியை குறி பார்த்து சுட்டுள்ளார். ஆனால், அந்த கோழி அண்ணாமலையில் துப்பாக்கிக் குண்டில் சிக்காமல் ஓடி விட்டது. அப்போது துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த குண்டு பக்கத்து வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் என்ற இளைஞரின் தலையில் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து கரியாலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய அண்ணாமலையை பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் எதிர்பாராத வகையில் நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்த கொலையா? இருவருக்கும் இடையே வேறு ஏதேனும் முன் பகை இருந்ததா என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.