சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை கும்பகோணம் சிறையில் இருந்து நீதிமன்ற காவலில் எடுத்து அவனிடம் இருந்து தங்க கட்டி, தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடரும் குற்ற சம்பவங்கள்

தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து கடந்த ஜனவரி மாதம் 10-ம் 125 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு சென்ற குடும்பம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 6 -ம் தேதி திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறை உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். பின்னர் நான்கு நாட்களுக்கு பிறகு ஜனவரி 10 -ம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

125 சவரன் தங்க நகைகள் மாயம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அறைகளில் இருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் உடைத்து அதில் இருந்த 125 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

கும்பகோணம் சிறையில் கொள்ளையன்

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட காவல்துறையினரின் விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பாத்தூர் பாணாக்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. அதனை அடுத்து அவரை தீவிரமாக காவல்துறையினர் தேடிவந்தனர். அப்போது வேறொரு திருட்டு வழக்கில் சமீபத்தில் கைதாகி, கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மீண்டும் சிறையில் அடைப்பு

இதனை அடுத்து அவரை கடந்த 11 -ம் தேதி நீதிமன்ற காவலில் எடுத்த தனிப்படை மற்றும் திருவெண்காடு காவல்துறையினர் மணிகண்டனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டதில், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டியாக மற்றி பதுக்கி வைத்திருந்த ஒரு தங்க கட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 53 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்‌. மேலும் மணிகண்டனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கும்பகோணம் சிறையில் அடைத்தனர்.