கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது.

இதேபோல் ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் நேற்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக காலை முதலே கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் காலை முதலே நகரின் பல பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை வரை வாகனங்கள் ஊர்ந்தே சென்றன. இதற்கு இடைப்பட்ட பகுதியான சீனிவாசபுரம் முதல் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தன. வேறு வழியின்றி சுற்றுலாப் பயணிகள் காருக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. பெருமாள் மலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை 8 கி.மீ., தூரத்தை கடக்க 2 மணி நேரத்திற்கு மேலாகியது. போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ள போலீசார் போதிய அளவு இல்லை.

அதேபோல், சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தன. பெருமாள் மலை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.