கேரளாவில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு பெண்களை, மதுபோதையில் இருந்த நபர் எட்டி உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயில் வர்கலாவில் நேற்று இரவு வந்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. ஆலுவா ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் இரண்டு பெண்கள் பொதுப்பெட்டியில் ஏறியுள்ளனர். அதே பெட்டியில் கதவு ஓரத்தில் ஒரு நபர் இருந்துள்ளார். இரண்டு பெண்கள் கழிவறைக்கு சென்று வெளியே வந்ததும், அவர்களை இந்த நபர் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர் அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவரையும் காலால் எட்டி வெளியே தள்ளியுள்ளார் அவர். இதில் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளார். மற்றொரு பெண் கதவை பிடித்தப்படி தொங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சகபயணிகள், மதுபோதையில் இருந்த நபரை தாக்கி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை விசாரித்தபோது, அவர் பனச்சமூட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்றும் வயது 43 என்றும் தெரியவந்தது. இவர், கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து ஏறியபோது, மதுபோதையில் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். முதலில் இந்த நபர், தான் யாரையும் தாக்கவில்லை என்றும் தன்னை நிரபராதி என்றும் தெரிவித்தார். பின்னர் தீவிர விசாரித்தபோது, இந்த சம்பவத்திற்கு இவர்தான் காரணம் எனத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே இந்த சம்பவம் காட்டுகிறது. பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு அச்ச உணர்வுடனே சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது.