தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சியில் தனது கைக்குழந்தையுடன் பங்கேற்ற ஆர்.கே.நகர் தவெக எம்.எல்.ஏ., பல்லவியை திமுக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., பல்லவி

2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்லவி போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தமிழகமே அவரின் வெற்றியை உற்று நோக்கியது. காரணம் 8 மாத கர்ப்பிணியாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வெற்றி பெற்றிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த மே மாத இறுதியில் பல்லவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே அவர் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி பொது நிகழ்ச்சிகளில் குழந்தையுடன் பங்கேற்று வருகிறார்.

பல்லவி - மேயர் பிரியா மோதல்

கடந்த ஜூன் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறந்த நிலையில், ஆர்.கே.நகரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பல்லவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் குழந்தையுடன் வருகை தந்திருந்தார். அதேசமயம் இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன், எம்.எல்.ஏ., என்று கூட பாராமல் பல்லவியை அவமானப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்ததாக நடந்த நிகழ்ச்சியில் பிரியாவிடம் பல்லவி நடந்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் மேயர் பிரியாவை தவெகவினர் கடுமையாக சாடினர்.

கைக்குழந்தையுடன் வலம் வரும் பல்லவி

பல்லவி மிக விரைவிலேயே மக்கள் பணிக்கு திரும்பியிருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். நேற்று மிக பிரமாண்டமாக நடந்த நிகழ்ச்சியில் பல்லவி எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். அப்போது அவரின் குழந்தையை வாயிலில் இருந்து இருக்கை வரை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தூக்கி வந்தார். பிறந்து ஒருமாதம் கூட ஆகாத குழந்தையை பொதுவெளியில் பல்லவி தூக்கிக் கொண்டு வந்ததை மருத்துவரும், திமுக ஆதரவாளருமான ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: நாய் மாதிரி காத்து கிடந்தாங்க.. தவெக இணைந்த முன்னாள் அமைச்சர்களை சாடிய தா.மோ.அன்பரசன்!

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு மருத்துவராக, சத்தமும் கூட்டமும் நிறைந்த ஒரு பொது விழாவிற்குப் பச்சிளங்குழந்தையைக் கொண்டு வருவது மருத்துவ ரீதியாக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று நான் கூறுவேன். ஒரு அரசியல் பார்வையாளராக, இந்த நிகழ்வைத் தவிர்க்க முடியாத, பிரசவத்திற்குப் பிறகான ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் சிங்கப்பெண் முன்னெடுப்பின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒருவராகத் திகழ்கிறார். ஒரு மனிதராக சில நாட்களே ஆன உங்கள் பச்சிளங்குழந்தையை வெளித்தோற்றத்திற்காக ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது தாய்மை அல்ல. அது ஒரு விளம்பர உத்தி. இந்தத் திட்டத்தின் முரண்நகை தானாகவே வெளிப்பட்டது” என ஷர்மிளா தெரிவித்துள்ளார்.