காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து சரி செய்யாமல், மூட நம்பிக்கையினை பின்பற்றி வருகிறது ஒரு கிராமம். காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி குழந்தையின் தோலை ஊதுபத்தியை கொண்டு எரிக்கின்றனர் கொப்பள் கிராமத்து மக்கள். கடந்த மாதம் கூட காய்ச்சலால் தவித்து வந்த 7 மாத குழந்தையின் தோலை பெண் ஒருவர் ஊதுபத்தியை கொண்டு எரித்திருக்கிறார். இதனால், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

குழந்தையின் உயிரை பறித்த மூட நம்பிக்கை:

காலம் காலமாக பல்வேறு விதமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீ மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது என பல விதமான மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல சீர்திருத்தவாதிகள் செயல்பட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அதன் பெற்றோர்களே செயல்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து 352 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கொப்பள் கிராமம்.

இங்கு, காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து சரி செய்யாமல் சிகிச்சை அளிப்பதாகக் கூறி குழந்தையின் தோலை ஊதுபத்தியை கொண்டு எரிக்கின்றனர். கடந்த மாதம், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு இதுபோன்று செய்ததால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

நடவடிக்கை எடுக்குமா அரசு?

வித்தலாபூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து வந்த சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் கொப்பள் மாவட்டத்தில் இதுபோன்று 18 சம்பவங்கள் நடந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சில சம்பவங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. பல கவனிக்கப்படாமல் இருந்துள்ளன.

ஊதுபத்திக்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாகவும், ஊதுபத்தியை கொண்டு தோலை கொளுத்தினால் நல்ல ஆரோக்கியத்தை கடவுள் அருளுவதாகவும் நம்பி, கிராமவாசிகள் இப்படி செய்து வருகின்றனர்.

ஏழு மாதக் குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் இம்மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இப்போது, பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த மூட நம்பிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "உலகமே முன்னேறிச் செல்லும் நிலையில், வித்தலாபூர் கிராம மக்கள் இன்னும் மூடநம்பிக்கைகளை நம்புகிறார்கள்.

பெற்றோர்களின் முட்டாள்தனம்:

மருத்துவத் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் தங்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு சில சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு ஒரு சம்பவம் முதலில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என புகார் கூறுகின்றனர்.

தங்கள் மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இந்தப் போக்கை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரிகள். இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், "சில குடும்பங்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை உறுதியாக நம்புகின்றன. மேலும் தங்கள் மூட நம்பிக்கைகளை மற்றவர்களுக்குப் பரப்புகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தோலை சிறந்த ஆரோக்கியத்திற்காக ஊதுபத்திகளால் எரிப்பதைக் கேள்விப்பட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரமான சிகிச்சைகளை பரிந்துரைக்கும் சாமியார்களை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.