குரு பகவான் நவகிரகங்களில் முக்கிய கிரகங்களில் ஒன்று. ஞானம், ஒழுக்கம், தர்மம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றிற்கு அதிபதி. குரு பார்வை கோடி நன்மைகள் என்பார்கள். குறிப்பாக, குரு பெயர்ச்சி என்றாலே எந்த ராசிகளுக்கு அதிஷ்டம் கொட்டப்போகிறது. யாருக்கெல்லாம் போதும் போதும் என்ற அளவுக்கு கஷ்டத்தை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சி

குறிப்பாக குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக சுமார் 1 வருடம் அதாவது (12 மாதங்கள்) எடுத்துக் கொள்கிறார். குருவின் 5, 7, 9 ஆகிய சுப பார்வைகள் படும் இடங்கள் பெரும் பலனைப் பெறும். இந்நிலையில் குரு பகவான் நாளை (அக்டோபர் 31, சனிக்கிழமை) மதியம் சுமார் 12.09 மணிக்கு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஆனால், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குருவின் அருள் பார்வையால் எந்தெந்த ராசிகள் பெரும் நன்மைகளைப் பெறப்போகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் புதிய நல்ல பலன்களையும் இனிமையான மாற்றங்களையும் தரப்போகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் முன்னேற்றம் கிடைக்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சிக் காலம் அனைத்துத் துறைகளிலும் அனுகூலமான சூழலை உருவாக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளும் நன்மைகளும் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியிலேயே குரு பகவான் பெயர்ச்சியாவதால், உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையப் போகிறது. குடும்பத்தில் நீடித்து வந்த மனக்கசப்புகளும் சிக்கல்களும் விலகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் தொடர் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் தனவரவு உண்டாகி நிதி நெருக்கடிகள் குறையும். வருமானம் இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் பொறுமையும் புரிதலும் அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு குருவின் பெயர்ச்சி சொல்ல முடியாத அளவுக்கு நன்மைகளையும் சுப யோகத்தையும் அள்ளித் தரப்போகிறது. சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் கொண்டாட்டமும் மகிழ்ச்சியான சூழலும் நிலவும். வாழ்க்கையில் செழிப்பும், மன அமைதியும் கூடும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்க உழைப்பு தேவைப்படும். செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக் காலம் ஒரு பொற்காலமாகவே அமையப்போகிறது. நீண்ட நாட்களாக கைக்கு வராமல் முடங்கிக் கிடந்த பணமும், நிலுவைத் தொகைகளும் வசூலாகும். குடும்பத்தில் அமைதி தொடரும். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகத் திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.