கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த மனிதநேய செயலை மாநகராட்சி ஆணையர் பாராட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 69, பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த குடும்பத்தினர், வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றும் போது தவறுதலாக 3 பவுன் தங்கச் சங்கிலியையும் குப்பையுடன் சேர்த்து வெளியே வீசியுள்ளனர்.

அந்த பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளரான சக்திவேல், சேகரிக்கப்பட்ட குப்பைகளை பிரித்துப் பார்த்தபோது அதற்குள் புதைந்து கிடந்த தங்கச் சங்கிலியை கண்டுபிடித்தார். சங்கிலி மதிப்புமிக்க நகை என்பதை உணர்ந்த அவர், அதை தன்வசம் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டார்.

பின்னர் உரிமையாளர்கள் முன்னிலையில், 3 பவுன் தங்கச் சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்தார். எதிர்பாராத வகையில் தொலைந்த நகை மீண்டும் கிடைத்ததில் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து, தூய்மைப் பணியாளர் சக்திவேலுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையர், பணியாளர் சக்திவேலின் நேர்மையை பாராட்டினார். மேலும் அதிகாரிகள் மூலம் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இன்றைய பொருளாதார சவால்கள் நிறைந்த காலகட்டத்திலும், பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் நடந்துகொண்ட சக்திவேலின் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் அவரது நேர்மையை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.