குன்னூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வாடகையை உயர்த்தியதுடன், கடைகளை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழமொழி சொல்லி விமர்சித்த இபிஎஸ்:

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்குச் சொந்தமாக சுமார் 800 கடைகள் உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது பரப்புரை செய்ய வந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின், குன்னூரில் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எப்படி பொதுமக்களிடம் வாங்கிய புகார் பெட்டியின் சாவியை தொலைத்தாரோ, நான்காண்டுகள் முடிந்த நிலையில் சுமார் 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லையோ, அதுபோல் குன்னூர் வியாபாரிகளுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்:

குதிரை கீழே தள்ளியது மட்டுமில்லாமல் குழியும் பறித்தது' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் பல மடங்கு வாடகையை உயர்த்தியது மட்டுமல்லாமல், தற்போது குன்னூர் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகளையும் இடிக்கப்போகிறோம், எனவே உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

நோட்டீஸ் வழங்கிய கையோடு நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வியாபாரிகளை வற்புறுத்துகின்றனர். குன்னூர் நகராட்சி வழங்கிய மாற்று இடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாத இடத்தில், எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், சிறிய அளவுள்ள கடைகளாக உள்ளன. வியாபாரிகள் தற்போது வணிகம் செய்து வரும் கடைகளை உடனடியாக காலி செய்துவிட்டு அங்கே செல்ல வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக நீலகிரி மாவட்டம் முழுவதும், குறிப்பாக குன்னூரில் உள்ள வியாபாரிகள் கோடை சீசன் மாதங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆப் சீசன் எனப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய சீசன் மாதங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு:

ஏற்கெனவே அரசு, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது என்று தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவே நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதனால், வியாபாரம் பெருமளவு பாதித்த நிலையில், தற்பொழுது வியாபாரம் செய்து வரும் கடைகளும் இடிக்கப்பட உள்ளதாகவும், போதுமான கால அவகாசம் தராமல் உடனடியாக மாற்று இடங்களுக்குச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்துவதால், வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

இதனால் 800 வியாபாரிகளின் குடும்பங்களும், அக்கடைகளில் பணிபுரியும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பணியாட்களின் குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், மறைமுகமாக இவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வியாபாரிகள் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட்டு, தொடர்ந்து வியாபாரிகளை பழைய இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.