மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற தனக்கு சரியான வரவேற்பு அளிக்கப்படவில்லை என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அதிருப்தி தெரிவித்திருப்பது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருத்தப்பட்ட திரௌபதி முர்மு

மேற்கு வங்கம் மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் புறநகர் பகுதியான கோசைன்பூரில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் பங்கேற்றார். இதற்காக டெல்லியில் இருந்து அம்மாநிலத்திற்கு சென்ற அவருக்கு சரியான வரவேற்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் முதலில் இந்த நிகழ்ச்சி டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பான்சிதேவா தொகுதிக்கு உட்பட்ட பிதான்நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அதே மாவட்டத்தின் புறநகரில் அமைந்துள்ள பாக்டோக்ரா பகுதியில் உள்ள கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது.

இவையெல்லாம் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இடம் மாற்றப்பட்டது மற்றும் மாநில அரசின் அமைச்சர்கள் தன்னை வரவேற்க இல்லாதது குறித்து வேதனை தெரிவித்தார். பிதான் நகர் நெரிசல் மிகுந்த இடம் என்பதால் உங்களால் செல்ல முடியாது என பாதுகாப்பு காரணங்களை சொன்னார்கள். ஆனால் அந்த இடம் அப்படி இல்லை. ஐந்து லட்சம் பேர் இங்கு எளிதாக கூடும் அளவுக்கு வசதி கொண்டது என நினைக்கிறேன். எங்களை ஏன் கோசைன்பூருக்கு அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் செல்ல முடியாத ஒரு இடத்தை மாநாட்டிற்கு நிர்வாகம் தேர்வு செய்ய என்ன காரணம் என தெரியவில்லை. அங்குள்ள மக்களால் கூட பங்கேற்க முடியாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறினார்.

டென்ஷனான மமதா பானர்ஜி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, “இது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் இந்தியக் குடியரசுத் தலைவரை மதிக்கிறோம். ஆனால் மன்னிக்கவும். நீங்கள் பாஜகவில் சிக்கிக் கொண்டீர்கள். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவின் ஆலோசனையின் பேரில் அரசியல் செய்யாதீர்கள். பாஜக தனது சுயநலத்துக்காக நாட்டின் மிக உயர்ந்த தலைவரை அவமதித்து தவறாகப் பயன்படுத்துகிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்தார்.

பிரதமர் மோடி கண்டனம்

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இது வெட்கக்கேடானது. மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசாங்கம் உண்மையில் அனைத்து வகையான எல்லை தாண்டுதல்களையும் தாண்டிச் சென்றுள்ளது. பழங்குடி சமூகத்திலிருந்து வந்த குடியரசுத் தலைவரால் வெளிப்படுத்தப்பட்ட இந்த வருத்தம் இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை உருவாக்கியது.குடியரசுத் தலைவரின் பதவி மாநிலத்தை விட உயர்ந்தது, அதன் கண்ணியம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசாங்கத்திற்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.