காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கீழே தவறவிட்ட தங்கத்தாலியை நேர்மையுடன் கண்டெடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியருக்கும், அதன் உரிமையாளரை விரைந்து கண்டுபிடித்து ஒப்படைத்த பெண் காவலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மருத்துவமனையில் பரபரப்பு

காஞ்சிபுரம் ஒளி முகமது பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் நேற்று (11.02.2026) உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த தங்கத்தாலி அறுந்து கீழே விழுந்துள்ளது. தாலி காணாமல் போனதை அறிந்த பிரியா, மிகுந்த அதிர்ச்சியடைந்து அதனைத் தேடி வந்துள்ளார்.

ஊழியரின் நேர்மை

அதே சமயம், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவரும், அரசு மருத்துவமனை ஊழியருமான பாரதி (தந்தை பெயர் ஆதி) என்பவர் மருத்துவமனை வளாகத்தில் அந்தத் தங்கத்தாலி கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், உடனடியாக அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்க முன்வந்தார்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

பாரதி கண்டெடுத்த அந்தத் தங்க நகையை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அயல் பணியாகப் பணிபுரிந்து வரும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் முருகேஸ்வரிடம் ஒப்படைத்தார். புகார் ஏதும் வரவில்லை என்றாலும், நகையின் உரிமையாளரைத் தேடும் பணியில் தலைமை காவலர் முருகேஸ்வரி துரிதமாக ஈடுபட்டார். முறையான விசாரணையின் அடிப்படையில், அந்தத் தாலி பிரியாவுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அவரை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் பாராட்டு மற்றும் வெகுமதி

காணாமல் போன நகையை நேர்மையுடன் ஒப்படைத்த மருத்துவமனை பாரதி மற்றும் உரிய நேரத்தில் செயல்பட்டு நகையை உரிமையாளரிடம் சேர்த்த பெண் தலைமை காவலர் முருகேஸ்வரி ஆகிய இருவரின் பணியைப் பாராட்டும் விதமாக, விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதிகளை வழங்கி கௌரவித்தார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

தொடரும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்

தமிழ்நாடு முழுவதும் சமீபமும் காலமாக தங்கம் விலை உயர்ந்தாலும், தற்செயலாக தங்களுக்கு கிடைக்கும் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை விட இவர்களின் நேர்மை விலை அதிகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.