தமிழ்நாட்டில் அகழாய்வு மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் வரலாற்றின் கோட்பாட்டை மாற்றும் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடியை பார்த்து பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற, "இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்" என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநில மாநாட்டில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில்...,"கீழடி என்றால் பலர் இன்று பயப்படுகிறார்கள். ஏன் பயப்படுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை சிலர் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பன்முகத்தன்மைக்கு முதன்மையான உதாரணம் தமிழ். தமிழ்நாட்டின் தொன்மை, வரலாறு பற்றிய ஆய்வுகள் முழுமையாக பொதுவெளிக்கு வராமல் தடுக்கப்படுவது எங்களுக்கு மிக வருத்தமாக உள்ளது.

ஹோமோசேப்பியன்ஸ் இனத்தின் மரபணு கிடைத்த இடம் தமிழ்நாடு

கீழடியில் விரிவான தொல்லியல் அகழாய்வு நடந்ததன் காரணமாகவே அது இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான். இந்த ஆய்வுகளை எல்லாம் செய்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. ஹோமோசேப்பியன்ஸ் இனத்தின் மரபணு கிடைத்த இடம் தமிழ்நாடு. மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விருமாண்டி என்பவரது உடலில் தான் அந்த மரபணு இருக்கிறது. 60,000 ஆண்டுகளாக இங்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை இன்று முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை.

கீழடி ஆய்வு அறிக்கையில் திருத்தம் செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை

கீழடி ஆய்வு அறிக்கையில் திருத்தம் செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை. அந்த அறிக்கை வெளியானால் அது இன்னும் நிறைய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். பல ஆய்வாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை கேட்டு பழகிய நாம், வரலாற்றை புரிந்து கொள்ள பழகவில்லை. ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் நம்முடைய வரலாறு நமக்கு தெரியாது. வரலாறு எழுதும் முறையை அவர்கள் தான் நமக்கு கற்று கொடுத்தவர்கள். வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆய்வாளர்க்கு பிராமணர்கள் உதவி செய்துள்ளனர். சிந்துசமவெளி நாகரீகம் இருந்ததே 1923ல் தெரியவந்தது. அதற்கு முன்னர் வரை அது பௌத்த சமயம் சார்ந்த ஒரு இடம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னரே, அந்த நாகரீகம் பௌத்த சமய காலத்திற்கு முந்தையது என்பது தெரிய வந்தது.

வரலாறு ஒரு அறிவியல். அதனை அறிவியல் தன்மையோடு தான் அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே அது நமக்கு புதிய செய்திகளை அளித்துக் கொண்டே இருக்கும். பானை ஓடுகளில் எழுதும் முறை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவிலேயே இது வேறு எங்கும் இல்லாத நடைமுறை. அது சாமானியரிடம் இருந்த எழுத்து அறிவை காட்டுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் எழுத்து பொறிக்கப்பட்ட 1600க்கும் மேற்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. எழுத்து உருவாக்கம் தமிழ்நாட்டில் தான் துவங்கியது என்பதற்கான ஆதாரங்கள் இவை.

5% ஆய்வு கூட இதுவரை கீழடியில் செய்யப்படவில்லை

கீழடியை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பது தான் என்னிடம் பலரும் அதிகமாக கேட்ட கேள்வி. அதற்கு நாங்கள் முறையாக ஆதாரங்களோடு விளக்கி சொன்னதால் மட்டும் தான் இன்று கீழடி இவ்வளவு தூரம் பேசப்படுகிறது. கீழடி அளவுக்கு வேறு எந்த இடங்களும் விளக்கி சொல்லப்படவில்லை. சங்க காலத்தின் வயது கி.மு.800 என்பது தான் கீழடி சொல்லும் செய்தி. இங்கு ஒரு நகரம் இருந்திருக்கிறது. மதுரை என்ற ஒரு நகரம் 2600 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற ஆதாரங்களை மதுரையை சுற்றியுள்ள பல ஆய்வுகளும் சொல்கின்றன. தமிழ்நாட்டில் இவ்வளவு புதைப்பிடங்கள் இருப்பதன் அடிப்படையில் பார்த்தால் இங்கு தமிழர்கள் நிலையான வாழ்க்கையை கொண்டிருந்தார்கள் என்பது நிரூபணமாகிறது. 5% ஆய்வு கூட இதுவரை கீழடியில் செய்யப்படவில்லை. ஆனால், அந்த அளவு செய்யப்பட்ட ஆய்வே இன்று உலகை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

தொல்லியல் ரீதியாக ஆதாரத்தை காட்டுங்கள்

சங்க இலக்கியம் முழுக்க தமிழர் சமூக வாழ்வியல் சார்ந்த இலக்கியம். அது, மக்களின் பண்பாட்டை, நகரங்களை, துறைமுக மூலம் நடைபெற்ற வெளிநாட்டு வணிகம் பற்றிய தகவல்களை சொல்கிறது. இதற்கு தொல்லியல் ரீதியாக ஆதாரத்தை காட்டுங்கள் என்றார்கள். இப்போது ஆதாரத்தை காட்டினால் அதை ஏற்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் அகழாய்வு மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் வரலாற்றின் கோட்பாட்டை மாற்றும். இரும்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது என்றால் இங்கு அப்போதே நகரம் உருவாகி இருக்காதா? இரும்பு தொழில்நுட்பம் தான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது. கீழடி சொல்கிறது தமிழகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரண்டாம் கட்ட நகர நாகரிகம் இருந்தது என்பதே உண்மை" என்றார்