2026ஆம் ஆண்டுக்கான கிளாட் எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு (CLAT) விண்ணப்பிக்க அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணைய தளமான consortiumofnlus.ac.in-ல் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் (NLUs) கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "CLAT 2026 ஆன்லைன் விண்ணப்பங்களை (UG மற்றும் PG திட்டங்கள் இரண்டிற்கும்) சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்திருப்பதை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பு, தேர்வர்கள் தங்கள் விண்ணப்பப் பதிவை கவனமாக முடிக்கவும், அவர்களின் விண்ணப்பப் படிவங்களை மதிப்பாய்வு செய்யவும், பிழைகளைத் தவிர்க்கவும் அனுமதிக்கிறது.
தேர்வு எப்போது? எதற்கு?
கிளாட் (CLAT 2026) தேர்வு டிசம்பர் 7, 2025 அன்று, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, ஒரே ஷிப்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள 25 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (NLUs) வழங்கும் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஒரு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.
CLAT 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்டெப் 1. consortiumofnlus.ac.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2. முகப்புப் பக்கத்தில் "CLAT 2026 பதிவு" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3. உங்கள் மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, உங்கள் தனிப்பட்ட, கல்வி மற்றும் வகைத் தகவல்களை நிரப்பவும்.
ஸ்டெப் 4. உங்கள் புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
ஸ்டெப் 6. படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலக் குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
[email protected]
தொலைபேசி எண்: 08047162020