ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில் : ''என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார்.‌ நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் 'செல்லாட்டி..' என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. 'தென்மேற்கு பருவக்காற்று ' படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.

இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. 'அயோத்தி' படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.

நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர்,நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,'' என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில் : '' கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. 'நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.

கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் 'பருத்திவீரன்', 'மைனா' படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.

நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில் : ''இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.

இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில் : ''கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.

தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார்.‌ இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது. புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன்.‌ அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.‌

பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர் 40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.

இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் 'நீர்ப்பறவை' எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும்.‌ அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். 'பவுடர்', 'ஹரா' ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான்.‌ இதற்கு ஊடகங்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில்: ''கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'சுந்தரபாண்டியன்' ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் 'அயோத்தி' படத்தில் கூட 'காற்று ஒரு பட்டம் போல..' பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன்.‌ மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.

காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம்.‌ அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும்.‌ இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.