உலகின் உயரமான EIFFEL TOWER-ஐ விட உயரமாக காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் இந்தியாவின் கட்டிடக் கலையை உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பறைசாற்றியுள்ளது. இந்த செனாப் ரயில் பாலத்தின் முக்கியத் தூணாக இருந்து வியர்வை, கண்ணீர் சிந்தி தனது வாழ்வின் 17 வருடங்களை இதற்காகவே அர்ப்பணித்துள்ளார் தென்னிந்தியாவின் சிங்கப்பெண் கலி மாதவி லதா.

ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தின் முதல் பொறியாளராக உருவெடுத்து இந்தியாவின் சிகரத்தை எட்டியுள்ளார் பேராசிரியை மாதவி லதா. ஆந்திர மாநிலம் ஏடுகுண்டலபாடு என்ற குக்கிராமத்தில் வசித்த விவசாய குடும்பத்தில் பிறந்தார் லதா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் இவர்தான் கடைக்குட்டி. தனது பள்ளிப்படிப்பு முழுக்க அரசுப் பள்ளியில் பயின்றார். இளம் வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற இவரது கனவு, ஏழ்மை காரணமாக கனவாகவே போனது. அதனால் உயர் கல்விக்காக அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

1992-ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (JNTU) distinction-ல் பிடெக் சிவில் இஞ்சினியரிங் முடித்தார் மாதவி. பிறகு NIT வாரங்கலில் M.Tech geotechnical engineering முடித்து கோல்டு மெடல் பெற்றார். பின்னர் 2000-ல் ஐஐடி மெட்ராஸில் சிவில் இஞ்சினியரிங்கில் பிஹெச்.டி. முடித்தார். அதன் பின்னர் 2002-2003 ல் இந்திய அறிவியல் நிறுவனமான IISc-யில் ராக் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போது அவர் ஐஐடி குவாஹாத்தியில் உதவி பேராசிரியையாகப் பணி புரிந்தார். பின்னர் IISC-ல் சிவில் இஞ்சினியரிங் துறை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.

பல நூறு பேருக்கு வழிகாட்டி

பின்னர் அங்கு பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் பேராசிரியை ஆனார். பல நூறு பொறியியல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்த மாதவி, ஜியோடெக்னிகல் இஞ்சினியரிங் ஆராய்ச்சிகளுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் அங்குள்ள Sustainable Technologies மையத்திற்கு தலைமை தாங்குகிறார். IISC geotechnical துறையில் பெண்களுக்கு என தனிக் கழிப்பறை இவர் காலகட்டத்தில் இல்லை. ஆண்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துறையை பெண் தேர்ந்தெடுத்தால், இப்படி ஒரு சவால் வரும் எனக்கூட பலரும் அப்போது அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கழிப்பறைக்காக அன்று போராடியாவர், பின்னர் அந்த துறையில் பாதிக்கு பாதி பெண்கள் பயிலவும் வழிவகுத்தார்.

இந்த நிலையில் காஷ்மீரில் பிரதமர் மோடி கடந்த ஜூன் 6 ஆம் தேதி செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே இந்த ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் உயரமான கோபுரம் என கருதப்படும் ஈபிள் டவரே 330 மீட்டர்தான். இந்த செனாப் பாலம் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

1,486 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு துவங்கியது இந்த ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள். இதில் 2005 ஆம் ஆண்டு புவி தொழில்நுட்ப ஆலோசகராக இணைந்தார் மாதவி லதா.. சுமார் 17 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, சவால்கள் நிறைந்த இந்த செனாப் ரயில் பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார் மாதவி.

பல சவால்களைக் கடந்து பணி

நில அதிர்வு, அதீதக் காற்று, குண்டு வெடிப்பு போன்ற சவால்கள் நிறைந்த இமாலய மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் இதன் கட்டுமான பணிகளிலும் பல சவால்கள் வந்துள்ளன. மேலும் செனாப் நதியும் அமைந்துள்ளதால் நில சரிவுக்கான அபாயமும் அங்கு இருந்துள்ளது. குறிப்பாக தீவிர புவியியல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இடையே இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர் நமது இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் STEAM துறையில் 75 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். அதில் மாதவி லதாவும் ஒருவர்.

சவால்கள் நிறைந்த பெண்கள் அதிகம் சாதிக்காத ஒரு துறையில் பல போராட்டங்களை கடந்து சாதித்து காட்டி இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் தென்னிந்திய பேராசிரியை கலி மாதவி லதா.