விழுப்புரம் : காவல்துறையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல், கட்டுப்பாடில்லாமல் அவிழ்த்து விடுகிறது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான் அதற்கு பொறுப்பாக உள்ளார். எனவே முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை நியாயமான முறையில் செயல்பட வேண்டும். தோல்வி பயத்தின் காரணமாகத்தான் தேர்தல் அறிவிப்பு தாமதமாகிறது: கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட மான்செஸ்டர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 27 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் வசூல் செய்த பணம் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்.

தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் தனியாக நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. பாலியல் கொடுமை மிக மோசமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் சமூகம் எவ்வளவு சீர்கெட்டுப் போயுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் பெண்ணை உயிரோடு பாதுகாத்திருக்க முடியும். காவல்துறையின் மெத்தனமான போக்கு காரணமாக பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பெண் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தால் பெற்றோரை கேவலமாக பேசுவது என்ன நாகரீகம். நம் காவல்துறையினருக்கு இப்படித்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. காவல்துறைக்கு மனிதாபிமானம், கடமை உணர்வு இருக்க வேண்டாமா?. சமூகத்தில் மோசமான வன்முறை கலாச்சாரம் தலை எடுத்து வருகிறது. நான்கு நாட்களுக்கு முன்பாக மதுராந்தகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசும், காவல்துறையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் ஆகாஷ் என்ற இளைஞரை கைது செய்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் அடித்து கொலை செய்யலாமா?. தவறு செய்தவரை காவல்துறை தண்டிக்க முடியுமா. பிறகு நீதிமன்றம் எதற்கு.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை ஒரு பெண்ணின் உயிர்பலிக்கு காரணமாகியுள்ளது. மற்றொருபுறம் ஒருவரை கைது செய்து காவல் சிறையில் வைத்து அடித்துக் கொள்கிறது. காவல்துறையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல், காவல்துறையை கட்டுப்பாடில்லாமல் அவிழ்த்து விடுகிற நடைமுறை என்ன நடைமுறை?. தமிழ்நாட்டில் காவல்துறை ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான் அதற்கு பொறுப்பாக உள்ளார். எனவே முதல்வர் கையில் வைத்திருக்கும் அந்த துறை நியாயமான முறையில் செயல்பட வேண்டும்.

நிறைய திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். திட்டங்கள் மூலம் பெரும் ஆதரவுகளை சீர்குலைக்க காவல்துறை செயல்படுகிறது. நடைபெறவுள்ள தேர்தலில் இணைந்து பணியாற்றப் போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணிக்காக எங்களின் அடிப்படை கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள் நாங்கள் அல்ல. மத்தியில் இருக்கும் பாஜக எனும் பிசாசு, பேய் கூட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு செய்கிற தவறுகளை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று குற்றச்சாட்டு வைப்போம்.

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிபெறப் போவதில்லை என்பதற்கு உதாரணம் கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது வரை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்திருந்தால் 15 நாட்களுக்கு முன்பு நீங்கள் தேர்தலை அறிவித்திருப்பீர்கள். நீங்கள் தேர்தலை அறிவிக்க காலதாமதம் செய்வதிலிருந்து நீங்கள் வெற்றிப் பெறப்போவதில்லை என புரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களை பொறுத்தவரை அதிகமான இடங்களை வேண்டும் என கேட்கிறோம். பதவி ஆசையால் அதிக இடங்களை கேட்பதாக சிலர் கூறுகிறார்கள். அதிகமானவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்கு சென்றால்தான் மக்கள் பிரச்சனைகளை அழுத்தமாக சட்டமன்றத்தில் வாதாடுவதற்கு தான் கேட்கிறோம். என பேசினார்.