தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 4200 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டும் உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. மொத்தம் 1,78,391 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது.

தேர்வுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். தேர்வில் முறைகேட்டை தடுக்க விண்ணப்பதாரர்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக தேர்வாளர்கள் ஆன்லைனில் அப்ளை செய்யும் போதே, அவர்களுடைய இடது கை விரல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் தஞ்சையில் இன்று நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 4200 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 4200 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கான தேர்வு இன்று மாவட்டம் முழுவதும் நான்கு மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும். குறிப்பாக தேர்வர்கள் காலை 8 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படும். தேர்வுக்காக தஞ்சை மாவட்டத்தில் 700 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காலை 10 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 3:30 மணியிலிருந்து 5:10 மணி வரையில் தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள், காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வரவேண்டும்.