நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒபிஎஸ் அறிக்கை

முந்தையை தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2009 ஆம் ஆண்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் , அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் , இது தொடர்பாக அரசு மருத்துவர்களால் 2020 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , அரசு மருத்துவர்களின் கோரிக்கையினை ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, அரசு மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், புதிதாக அரசாணை எண் 293-ஐ வெளியிட்டு, அதன்படி மருத்துவர்களுக்கு கூடுதல் படிகள் வழங்கப்படும் என்றும், அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கினை தாக்கல் செய்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இந்த மனுவிற்கு 28-10-2024-க்குள் பதில் மனு அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு

ஆனால், தி.மு.க. அரசோ, வாக்குறுதியையும் நிறைவேற்றமாட்டோம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினையும் மதிக்கமாட்டோம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையையும் செயல்படுத்தமாட்டோம் என்ற மன ரீதியில் இறுமாப்புடன் செயல்பட்டு வருவதும், கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பதும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. கார் பந்தயம், 133 அடி பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசுக்கு 19,000 அரசு மருத்துவர்களுக்கான ஊதிய மற்றும் பதவி உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன தயக்கம் என்று அரசு மருத்துவர்கள் கேட்கிறார்கள்.

எனவே, அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதனை செயல்படுத்த தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.