Thilagabama: காமராஜரை இழிவுபடுத்தி பேசிய பத்திரிகையாளர் முத்தாரை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வித் தந்தை என்று போற்றப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில், பத்திரிகையாளர் முக்தார் அகமது தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வரலாற்றையும், சமூக நீதியையும் நிலைநிறுத்திய தலைவர்களில் ஒருவரான காமராஜர் பற்றிய முக்தாரின் கருத்துகள், மறைந்த தலைவரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.அவரை கைது செய்யக்கோரி நாடார் சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, காவல்நிலையங்களிலும் புகாரளித்தனர்.

மன்னிப்பு கோரிய முக்தார்..

மாநிலம் தழுவிய அளவில் ஏற்பட்ட எதிர்ப்பை தொடர்ந்து காமராஜர் குறித்து பேசியதற்கு முக்தார் மன்னிப்பு கேட்டார். காமராஜர் குறித்து முக்கிய பிரமுகர்கள், செய்தி சேனல்கள் சொன்னதைத்தான் தான் பேசியதாகவும், அது தனது தனிப்பட்ட கருத்து இல்லை என்றும், தனது பேச்சால் குறிப்பட்ட சமுக மக்கள் புண்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். ஆனாலும், இதனை ஏற்க மறுத்த நாடார் சமுகத்தினர் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் முக்தாரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திலகபாமா கைது

அந்த வகையில் முக்தாரைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் நாடார் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநரகத்தை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. எழும்பூரிலிருந்து தொடங்கிய பேரணியில் தமிழ்நாடு நாடார் கூட்டமைப்பு தலைவர் முத்து ரமேஷ் மற்றும் பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட 400-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பேரணியின் போது முக்தாரை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதும், திலகபாமா உள்ளிட்டோர் சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரணியில் ஈடுபட்ட 400-க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

நடவடிக்கை பாயாதது ஏன்?

மக்களுக்கான ஆட்சியில் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடத்தி காட்டிய, தமிழகத்தின் பெருமைமிகு தலைவரான காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஒருவரை காவல்துறை கைது செய்யாதது ஏன்? என திலகபாமா கேள்வி எழுப்பியுள்ளார். பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஏராளமான புகார்கள் வழங்கப்பட்ட பிறகும் முக்தார் மீது நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன? எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.