தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தனியார் பேருந்துகளின் அதீத வேகம் மற்றும் ஏர்ஹாரன்களை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டு செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தஞ்சை மாநகரின் மிக முக்கிய சந்திப்புகளில் ஒன்றான மேரீஸ்கார்னர் பகுதியில், தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், காதை பிளக்கும் அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் நிகழும் முன் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நகரின் இதயமாக விளங்கும் மேரிஸ் கார்னர் பகுதியில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், வங்கிகள், பள்ளிகள் இயங்கி வருகிறது. நகரின் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் ஒரு பிரதான வழித்தடமாக மேரீஸ்கார்னர் பகுதி உள்ளது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சந்திப்பைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மட்டுமன்றி, நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருப்பது வழக்கம். இத்தகைய மிக முக்கியமான மற்றும் நெரிசல் மிகுந்த மேரீஸ் கார்னர் பகுதியில், ஒரு சில தனியார் பேருந்துகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மிக அதிவேகமாக இயக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும், அதிக பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற நோக்கில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட, அதிக ஒலியெழுப்பும் 'ஏர்-ஹாரன்'களைப் பயன்படுத்தி, முன்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்களை அதிர வைக்கின்றனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் முதியவர்கள் இந்த அதிக சத்தத்தில் எழும் ஏர்ஹாரன்களால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை தடுமாறி ஓட்டிச் சென்று கீழே விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "மேரீஸ் கார்னர் பகுதியை கடப்பதே ஒரு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக தனியார் பேருந்துகள் பின்னால் வரும்போது எழுப்பும் அதிகப்படியான சத்தம், முதியவர்களையும், பெண்களையும் பயமுறுத்துகிறது. அதிக வேகத்தால் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளது"

எனவே, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் உடனடியாக விதிகளை மீறும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதேபோல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட ஹாரன்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

முக்கியமாக மினி பேருந்துகளால் வாகன ஓட்டுனர்கள் படும் அவதியும் சொல்லி மாளமுடியாத ஒன்றாகும். மிகவும் வேகமாகவும், கட்டுபாடுகள் இல்லாமல் ஓட்டப்படும் மினிபஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மிகுந்த வேகம், அதிகளவு ஒலி எழுப்புதல் போன்றவற்றை செய்து வரும் மினி பஸ் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்களின் வேதனைகளை புரிந்து கொள்வார்கள் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.