புதுச்சேரி: புதுச்சேரியில் காதலியை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரம் அடைந்து, சக நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் பீர் பாட்டிலால் குத்தி கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற அப்பு. இவர் கடந்த வெள்ளி நேற்று முன்தினம் இரவு பெத்துசெட்டிபேட்டை, கொல்லிமேடு மைதானத்தில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரதாப்பின் தாயார் நவநீதம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரதாப் அவரது நண்பரான ரவுடி மண்ணெண்ணெய் வினோத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற போது இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. பிறந்தநாள் விழாவில் பெத்துச்செட்டிபேட் பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மற்றும் நெருப்பு குமார், வினோத் ஆகியோருடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, வில்லியனூரில் தலைமறைவாக இருந்த பழனிமுருகன், கிருஷ்ணகுமார், வினோத் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 3ம் தேதி வினோத்தின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையம் கனரக வாகனம் நிறுத்துமிடத்தில் பிரதாப், வினோத், பழனிமுருகன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, பிரதாப்பிற்கும், பழனி முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதாப் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிரதாப் கடுமையாக பேசியது பழனி முருகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது பிரதாப்பை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பிரதாப்பை மீண்டும் மதுஅருந்த அழைத்து இருக்கிறார். பெத்துசெட்டிபேட்டை மைதானத்திற்கு வந்த பிரதாப் போதை தலைக்கேற மது அருந்தி இருக்கிறார்.

வெடிகுண்டு வீசியது மற்றும் அடிதடி வழக்கு

அப்போது, பழனிமுருகன், தனது காதலியை பார்க்க செல்ல பிரதாப்பிடம் டு வீலர் கேட்டுள்ளார். அதற்கு பிரதாப் கொடுக்க மறுத்ததோடு பழனி முருகனின் காதலியை தகாத வார்த்தையால் திட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனிமுருகன் மது பாட்டிலால் பிரதாப்பின் தலையில் அடித்து, உடைந்த பாட்டிலால் அவரது வயிற்றில் குத்தி இருக்கிறார். இதில் சரிந்து விழுந்த பிரதாப்பை கிருஷ்ணகுமார் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து சரமாரியாக பாட்டில்களால் குத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், உயிரிழந்த பிரதாப் மீது வெடிக்குண்டு வீசியது மற்றும் அடிதடி வழக்கும், கைதான வினோத், பழனிமுருகன், கிருஷ்ணகுமார் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.