"காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளார்"

மதிமுக உட்கட்சி பிரச்சனை

தமிழ்நாட்டின் பிரதான கட்சியாக இருக்கக்கூடிய திமுகவிலிருந்து பிரிந்து உருவாகிய கட்சிதான் மதிமுக. மதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பிரச்சனையால் சவால்களை சந்தித்து வருகிறது. திமுகவில் இருந்து 1993 ஆம் ஆண்டு வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு திமுகவை கைப்பற்ற வைகோ பல முயற்சிகளை மேற்கொண்ட பிறகும், திமுகவை வைக்கோவால் முடியவில்லை. அதன் பிறகு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்த போது ஏற்படுத்திய சேதத்தை விட, வைகோ வெளியேறிய போது அதிகம் சேதம் ஏற்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். திமுகவிலிருந்து பிரிந்த வைகோவால், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், அப்பொழுது பல்வேறு கருத்துக்கள் எழுந்திருந்தது. ஆனால் தேர்தல் அரசியலில் வைகோ எடுத்த பல்வேறு மோசமான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்ததாக விமர்சனங்களும் இருந்து வருகிறது.

மதிமுகவில் துரை வைகோ

வாரிசு அரசியலை எதிர்த்து தான் மதிமுக என்ற புதிய கட்சி உருவாகி இருந்தது. ஆனால் மதிமுகவில் வைகோவின் மகன் துரை, வைகோவால் அறிமுகப்படுத்திய பட்டதால் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது. வைகோவின் தீவிர ஆதரவாளராகவும் வலது கரமாக பார்க்கப்பட்ட, மல்லை சத்யா துரை வைக்கோவின் அரசியல் வருகையை நேரடியாக எதிர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எப்பொழுதெல்லாம் துரை வைகோ மற்றும் மல்லை சத்தியா ஆகிய இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் வைகோ தலையிட்டு இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்தியா

இந்தநிலையில் மல்லை சத்யா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் என அறிவிக்கப்பட்ட போது, வைகோ விற்கு எதிராக மல்லை சத்தியா ஆதரவாளர்கள், தங்களது கார்களில் இருந்து மதிமுக கொடியை நீக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். அதன் பிறகு நாங்கள் மதிமுக கொடி பொருந்திய வேட்டியை கட்ட மாட்டோம் என தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

காஞ்சியில் உதயமாகும் புதிய கட்சி ?

இந்தநிலையில் அண்ணா பிறந்தநாள் அன்று தனது முடிவை அறிவிக்க போவதாக மல்லை சத்யா அறிவித்திருந்தார். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மல்லை சத்யா முப்பெரும் விழாவை நடத்த உள்ளார்.

இதுகுறித்து மல்லை சத்யா ஆதரவாளர்களிடம் பேசுகையில், புதிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் இருந்து மல்லை சத்யா ஆதரவாளர்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தொடர்ந்து இயக்கத்திற்கான புதிய பெயர்களையும், புதிய கொடி குறித்து ஆலோசனைகளையும் வழங்கி வந்தனர். இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் நிச்சயமாக புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

அண்ணா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ?

காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்சி பெயராக, அண்ணா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிமுக கொடி போன்றே கொடியை உருவாக்கி, அந்த கொடியில் "அண்ணா" புகைப்படம் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.