பக்தர்களுக்கு அருள்பாலித்த காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் ராஜ வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மாசி மாத பிரம்மோற்சவ விழா

ஆன்மீகத் திருத்தலமான காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற காமாட்சி அம்மன் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நான்காம் நாளான இன்று காலை காமாட்சி அம்மன் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் வடிவில் அமைந்த இந்த வாகனத்தில், லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய தேவியருடன் அமர்ந்து காமாட்சி அம்மன் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.

இந்த விசேஷ உலாவுக்காக அம்மனுக்கு மனோரஞ்சிதம், மல்லிகை உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அம்மனின் இந்த எழில் கோலத்தைக் காண மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் இந்த ஊர்வலத்தின் போது நேரில் வந்து அம்மனைத் தரிசனம் செய்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணங்களுடன் நடைபெற்ற இந்த வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் சக்தி, பராசக்தி' என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.