திருச்சி: கழுத்தை நெறித்த கடன் தொல்லையால் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவர், அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா (35). இவர் ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஆராதனா (9) ஆலியா (3) என்ற இரு பெண் குழந்தைகள்.

இந்நிலையில் அலெக்ஸ் நடத்தி வந்த துணிக்கடையில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் துணிக்கடையை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் அலெக்ஸ் அதனை மூடி விட்டதாக கூறப்படுகிறது. வியாபாரத்திற்காக பல இடங்களில் அலெக்ஸ் கடன் வாங்கியிருந்துள்ளார். துணிக்கடையையும் பூட்டியதால் அலெக்சிற்கு அதிகளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அலெக்ஸ் வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அலெக்ஸுக்கும், அவருடைய மனைவி விக்டோரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடன் சுமை ஒருபக்கம், வீட்டிற்கு வந்து அவமானப்படுத்தும் கடன் கொடுத்தவர்கள் ஒரு பக்கம் என்று தவித்து வந்த அலெக்ஸ் – விக்டோரியா தம்பதி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு விபரீத முடிவை எடுத்துள்ளனர். மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர். இதனால் இரு குழந்தைகளும் இறந்து விட்ட நிலையில் தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து இன்று காலை அலெக்ஸ் வீட்டுக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர் அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என நான்கு பேரும் அசைவற்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன் இதுகுறித்து பொன்மலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலெக்ஸ் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நான்குபேரும் இறந்து கிடந்தது. தெரிய வந்தது. தொடர்ந்து அலெக்ஸ், விக்டோரியா மற்றும் 2 குழந்தைகளின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து அலெக்ஸ் தம்பதியினர் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன்சுமையால் ஒரு குடும்பமே பலியானது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.