சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( வயது 42 ) இவர் சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்த அந்த மனுவில் ;

சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த மே, 22 - ல் , ஆன்லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தேன். பேருந்தில் மொபைல் சார்ஜிங் , புத்தகம் வாசிக்க மின் விளக்கு , குடிநீர் பாட்டில் , கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன என " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வசதிகளுக்கும் சேர்த்து கட்டணமாக 1,182 ரூபாய் வசூலித்தனர். ஆனால், பயணத்தின் போது கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலம் கழிக்க பயன்படுத்தக் கூடாது. மீறினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.

இது தொடர்பாக, எச்சரிக்கை வாசகத்தை பேருந்தில் ஒட்டியிருந்தனர். எனவே, நியாயமற்ற வர்த்தகம் , பயணிகளை ஏமாற்றும் நோக்கில் ஈடுபட்ட தனியார் பேருந்து நிறுவனம் , 50,000 ரூபாய் இழப்பீடும் டிக்கெட் கட்டணத்தையும் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் கண்ணன் டி. கோபிநாத் , உறுப்பினர்கள் கவிதா வி.ராம மூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் ;

பேருந்து நிறுவனம் தரப்பில் யாரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்த புகாரில் உள்ள பிரச்சனை பொது முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தவறான விளம்பரம் வெளியிட்டு , இது போல சுரண்டல் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி , எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி , பயணியர் அத்தகைய வசதிகளை பயன்படுத்த பேருந்து நிர்வாகம் உடனே அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அத்தகைய தவறான விளம்பரத்தை உடனே இணைய தளத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய் இழப்பீடாக " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.