திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர், கல்லூரி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராக சேகர் என்பவர் பொறுப்பு வகித்து வரும் நிலையில், இவர் வழக்கம்போல் பணிகளை கவனிப்பதற்காக இன்று கல்லூரிக்கு வருகை தந்துள்ளார்.அப்பொழுது. கல்லூரி வளாகத்தில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிர்வாகத்தினர் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு, அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில், நிர்வாக குழு உறுப்பினர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.