உங்கள் நாட்டின் மிக அழகான பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என துருக்கி நாட்டுக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும், அந்நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவருமான முஹூசி கைனருகபா தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பல ஆண்டுகளாக நல்ல உறவில் இருந்து வந்த உகாண்டா - துருக்கி நாடுகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உகாண்டாவின் பாதுகாப்புப் படைத் தலைவரான முஹூசி கைனருகபா சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளை வெளியிட்டு துருக்கி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதன்படி, “சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட வணிக மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் துருக்கி பயனடைகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் துருக்கி லாபம் ஈட்டி வரும் வேளையில், உகாண்டா பல ஆண்டுகளாக ஒரு பெரும் பாதுகாப்புப் பொறுப்பைச் சுமந்து வருகிறது.

அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பணிகளில் முக்கியமான ஒன்றாக உகாண்டா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சோமாலியாவில் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இதன்மூலம் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவை எதிர்த்துப் போராட இந்த படைகள் பயன்படுத்தப்படுகின்றது.

இதற்காக துருக்கியிடமிருந்து உகாண்டா ஒரு பாதுகாப்பு தொகையாக 1 பில்லியன் டாலரைப் பெற வேண்டும். துருக்கியைப் பொறுத்தவரை, இது மிகவும் எளிமையான ஒரு ஒப்பந்தம் தான். ஒன்று அவர்கள் எங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும், அல்லது நான் இங்குள்ள அவர்களின் தூதரகத்தை மூடிவிடுவேன். அதற்குப் பதிலடியாக அவர்களும் துருக்கியில் உள்ள நமது தூதரகத்தை மூடலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 30 நாட்களுக்குள் துருக்கியுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்படும்” என முஹூசி கைனருகபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உகாண்டாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் நீண்ட பிணைப்பை கொண்டவை. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சமூக ஊடக விளையாட்டு போல கருத வேண்டாம். தொடர்ந்து முதுகில் குத்தும் ஒரு நண்பன் யாருக்கு வேண்டும்? எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் அவர் உங்கள் சொந்த விஷயத்திற்காக துருக்கிக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு உகாண்டா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் துருக்கிக்கு விடுத்த கெடுவில் உங்கள் நாட்டிலேயே மிகவும் அழகான பெண்ணை எங்களிடம் ஒப்படைக்குமாறும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளார்.

அதே பதிவில், “இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த முஹூசி கைனருகபா நம்முடைய கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் பூமியாகிய புனித பூமியைப் பாதுகாக்க ஒரு லட்சம் உகாண்டா வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப நான் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக முஹூசி கைனருகபா கடந்த 2022ம் ஆண்டு இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பூமியின் மிக அழகான பசுக்கள் என வர்ணிக்கப்படும் 00 அங்கோலே பசுக்களை வழங்கத் தயாராக இருப்பதாக குறித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.