அரசின் செய்தியாளர் சந்திப்பில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கிய கர்னல் சோபியா குரேஷியை சிறுமைப்படுத்தி பேசியுள்ளார் பாஜக அமைச்சர். சோபியா குரேஷியை பாகிஸ்தானியர்களின் சகோதரி எனக் குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய் ஷா. அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பெண் சோபியா குரேஷி:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர். ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்குவதற்காக செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை நாட்டு மக்களுக்கு விளக்கியவர் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி கர்னல் சோபியா குரேஷி. கடும் அழுத்தத்திற்கு மத்தியிலும் சொல்ல வேண்டியவற்றை சிறப்பாக விளக்கி பாராட்டை பெற்றார் சோபியா குரேஷி.

இந்த நிலையில், சோபியா குரேஷியை சிறுமைப்படுத்தும் விதமாக அவரை பாகிஸ்தானியர்களின் சகோதரி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா. Mhow பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "பிரதமர் மோடி, மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வாய் விட்டு வாங்கி கட்டிக்கொண்ட பாஜக அமைச்சர்:

சமூகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் (பாகிஸ்தானைக் குறிப்பிட்டு) நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் சின்தோரை (பொட்டு) அழித்தார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்க அவர்களின் சகோதரியை (சோபியா குரேஷி) அனுப்பினோம்.

அவர்கள் இந்துக்களின் ஆடைகளை கழற்றி கொன்றார்கள். ஆனால், மோடியோ, அவர்களின் சகோதரியை அனுப்பி அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். எங்களால் அவர்களின் ஆடைகளைக் கழற்ற முடியவில்லை. அதனால் அவர்களின் சமூகத்திலிருந்து ஒரு மகளை அனுப்பினோம். நீங்கள், எங்களின் சகோதரிகளை விதவை ஆக்கினீர்கள். எனவே, உங்கள் சமூகத்தின் ஒரு சகோதரியை வைத்து உங்களை நிர்வாணமாக்கி உள்ளோம். உங்களை பழிவாங்க, உங்களின் சாதியை சேர்ந்த பெண்ணை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும் என்பதை மோடி நிரூபித்தார்" என்றார்.

கொதிக்கும் கார்கே:

மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய பாதுகாப்பு படையையும் பெண்களையும் விஜய் ஷா அவமானப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து அவரை தூக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் மனநிலை எப்போதும் பெண்களுக்கு எதிரானது. முதலில், பஹல்காமில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவியை சமூக ஊடகங்களில் கிண்டல் செய்தனர். பின்னர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் மகளை திட்டினர். இப்போது, பாஜக அமைச்சர்கள் நமது துணிச்சலான சோபியா குரேஷிப் பற்றி அநாகரீகமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். மோடி, உடனடியாக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.